Wednesday, February 27, 2008

அறிஞர் கோ.முத்துப்பிள்ளை தமிழ் ஆட்சிமொழியாகச் சிறப்புடன் செயற்படத்
தமது பணிக்காலத்திலும் ஓய்வு பெற்றபின்பும் கடுமையாக உழைத்தவர்.பல ஆட்சித்துறைச்சொற்களை உருவாக்கியவர்.அரசு அலுவலர்களுக்குப் பாடம் நடத்தித் தமிழில் ஆணைகளும் வரைவுகளும் வருதற்குக் காரணமாக விளங்கியவர்.இவர் இலக்கணம் பயிற்றும் விதம் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது.நகைச்சுவை மிளிர எளிமையாகக் கற்றுக்கொடுப்பதால் எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றித் தமது பிழைகளை அலுவலர்கள் திருத்திக்கொள்ள வழிகாட்டுவார்.

இவர் அளித்த ஊக்கத்தினால் பலர் புதிய கலைச்சொற்களை உருவாக்கியளித்துள்ளனர்.
தமிழ் இலக்க்யங்களை இனிய எளிய தமிழில் மக்கள் மனங்கொள்ளும் வகையில் பொழிவாற்றிப் பரப்பியவர்.கடல்கடந்து தமிழர்கள் வாழும் இடங்களுக்கெல்லாம் சென்று தமிழ் பரப்பிய பெருமை மிக்க பெரும்புலவர்.
தொண்ணூறு அகவை நிறைந்த இப்பெரியாரை,வியாசர்பாடி,மாக்கவி பாரதிநகரில் அமைந்துள்ள,அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தோம்.
கவிஞர் வே.குணசேகரன் அவரது எழில் கலை மன்றத்தின் சார்பில்
இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற அப்பெரியார்,தமிழ்த்தொண்டு
ஆற்றுவதில் தளர்ச்சிகொள்ளாது தொடர்ந்து அப்பணியை அவரவர் சூழலுக்கேற்றவாறு ஆற்றிவரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
ஊடகங்கள் தமிழுக்கு இழைத்துவரும் தீங்கினை எடுத்துரைத்து,மக்கள்
தமிழறிவும் தமிழுணர்வும் பெற ஆவன செய்யுமாறு எங்கள் அனைவரையும் வேண்டினார்.

1 comment:

Anonymous said...

அய்யா,வணக்கம்.எங்கள் எழில் கலை இலக்கிய மன்றத்தின் நிகழ்வினைத் தங்கள் வலைப்பூவால் அணிசெய்தமைக்கு நன்றி.இனித் தொடர்ந்து தங்கள் வலைப்பூவுக்கு எங்கள் மன்ற நிகழ்வுகளை
அனுப்புகிறோம்.இதுபோன்றே ஏனைய தமிழ் அமைப்புகளும் செய்தால் ஒரே
இடத்தில் அனைத்துத் தமிழ்ச் செய்திகளையும் தெரிந்துகொள்ள உறுதுணை புரியும்.
தங்கள் முயற்சி வெல்க.
தங்கள் தமிழ்த்தொண்டு பாராட்டுக்கு உரியது.நன்றி.
அன்புடன்,
குணசேகரன்,
எழில் கலை மன்றம்,
36ஏ,நெல்வயல் சாலை முதல் குறுக்குத் தெரு,
பெரம்பூர்,சென்னை-11
தொ.பே.:044-25510605