Monday, April 14, 2008

சிறப்புமிகு வெள்ளிவிழா
சென்னை,அடையாறு,கத்தூரிபாய்நகரில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக
வாடிக்கையாளரின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக இயங்கிவரும் சுப்ரஜா சீட்டு&நிதி நிறுவனம் சித்திரை முதல் நாளில்(௧௩/௪/௨00௮) தனது வெள்ளிவிழாவைச் சிறப்புறக் கொண்டாடியது.
சென்னை,சைதாப்பேட்டை,அரசு அலுவலர் குடியிருப்பு வளாகத்தில்(டாடண்டர் நகர்)அமைந்துள்ள கலைஞர் சமூகக்கூடத்தில் மாலை ஐந்தரை மணிக்குத் தொடங்கிய இவ்விழாவுக்கு இந்நிறுவனத்தின் மேனாள் செயல் இயக்குநர் திரு.பொ.சேதுபாண்டியன் தலைமை தாங்கினார்.
முதலில் விழாவுக்கு வருகைபுரிந்த அனைவரையும் இந்நிறுவனத்தின் புரவலர் பேராசிரியர் செ.சுப்பிரமணியன் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசின் திட்டக்குழுத்துணைத்தலைவர் முனைவர் மு.நாகநாதன்
வெள்ளிவிழாமலரை வெளியிட்டார்.நிறுவனத்தின் மூத்த வாடிக்கையாளர்
திருமலைநம்பி முதல் படியைப் பெற்றுக்கொண்டார்.
திட்டக்குழுத் துணைத்தலைவர் தமது சிறப்புப்பேருரையில் இந்தியப்பொருளாதார வளர்ச்சிடயில் நிதிநிறுவனங்கள் ஆற்றவேண்டிய பணியைப் parrrrக்கமாக எடுத்துரைத்தார்.
நடுத்தரவருக்கத்தினரின் ஏமாளிப்பண்பைப் பயன்படுத்திப் பல நிறுவனங்கள் மோசடி புரிந்த துயர்மிகுநிலையையும் படித்தவர்களே ஏமாறும் சூழல் தமிழ்நாட்டில் மிகுந்திருப்பதையும் கூறிய அவர்,சுப்ரஜா சீட்டு&நிதி நிறுவனம்
நேர்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் செயலாற்றும் திறத்தினைப் பாராட்டினார்.
சுப்ரஜா நிறுவனம் மிகவும் சிறப்பாக வாடிக்கையாளர் சேவை புரிந்துவருவதால் தாம் தொடர்ந்து இந்நிறுவனத்தில் சீட்டுக்குழுவில் அவர் கூறியது,சுப்ரஜாவின் பணிகளுக்கு வைத்த மணிமகுடமாகத் திகழ்ந்தது.
அவரை அடுத்து,பாலுசேரி நிதி நிறுவனத்தின் இயக்குநர்,திரு.வைத்தியநாதன்
வாழ்த்துரை வழங்கினார்.சுப்ரஜா நிறுவனத்தின் புரிந்துவரும் சிறப்புமிகு பணியைப் பாராட்டிய அவர்,நடுத்தர வகுப்பினர் இந்நிறுவனத்தின் சீட்டுக்குழுக்களில் சேர்ந்து சிறந்த பயன் அடைய வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
தாராபுரம் கோட்ட ஆட்சியர் புலவர் நாகராஜன் கோடையிடி என முழங்கினார்;கவிதைமழை பொழிந்தார்.சுப்ரஜா நிறுவனத்தின் செயல் இயக்குநர் கி.ப.தமிழ்வண்ணனுக்கும் தமக்குமிடையேயான நட்பின் திறத்தை நவின்றார்.நாணயமும் நம்பகத்தன்மையும் இரு கண்களாகக் கொண்டு செயற்படும் சுப்ரஜா நிறுவனத்திற்கு நல்வாழ்த்துக் கூறினார்அவையினர் அவர்தம் பொழிவின் தமிழ்ச்சுவையில் ஆழ்ந்தனர்.
அனைத்திந்திய வங்கி அலுவலர் சங்கப் பொதுச்செயலாளர் திரு ஆர்.ஜெ.ஸ்ரீதரன் பொருளாதாரக் கோட்பாடுகளை விளக்கி,நடுத்தரவகுப்பினர்
சீட்டுக்குழுக்களில் சேர்ந்து பயனடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.சுப்ரஜா நிறுவனத்தின் தனிச்சிறப்புகளைக் கூறினார்.
இறுதியாகப் பேசிய பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தமக்கும் இந்நிறுவனத்தின் புரவலர் சபேராசிரியர் செ.சுப்பிரமணியனுக்கும் இடையேயான நாற்பதாண்டுக்கால நட்பையும் சுப்பிரமணியனின்
ஆளுமைத்திறத்தையும் விளக்கினார்.
கடந்த இருபத்தைந்தாண்டுகளாக மோசடி நிதிநிறுவனங்கள் நடுத்தர வகுப்பினருக்கு அளித்துவரும் தொல்லைகளையும் நசுப்ரஜா நிறுவனம்
ஆற்ரிவரும் ஒப்பற்ற பணியையும் அவர் விரிவாக விளக்கினார்.
மேனாள் செயல் இயக்குநர் திருபொ.சேதுபாண்டியன் விதிமுறைகளைக் கடைப்பிடித்த சீர்மிகு முறையையும் இன்னார் இனியர் என வேறுபாடு கருதாது அவர் போற்றிய நடுநிலையுணர்வையும் சிறப்பாகக் கூறினார்.
வேலைப்பண்பாடு என்னும் சீர்மிகு பண்பாடும் வாடிக்கையாளர் சேவையும் சுப்ரஜாவில் எத்துனைச் சிறப்பாகத் திகழ்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.இவ்வகையில் சுப்ரஜாவுக்கு இணையாகத் தாம் கருதுவது டி.வி.எஸ்.நிறுவனம் ஒன்றையே என அவர் கூறினார்.
இருபத்திரண்டாண்டுகளாகத் தொடர்ந்து சுப்ரஜா சீட்டுக்குழுக்களில்
சேர்ந்து தாம் அடைந்த நன்மைகளையும் அவர் நன்றியுணர்வு பொங்கக் குறிப்பிட்டார்.
மொத்தத்தில் இவ்விழா ஒரு குடும்பநிகழ்ச்சியாக,வாடிக்கையாளர் அனைவரும் தமது நிறுவனத்திற்கு வாழ்த்துக்கூறும் நிகழ்வாக்,தமிழ்மணம் கமழும் பண்பாட்டுப் பலகணியாக்,ஒன்றுபட்ட உள்ளங்களின் சங்கமமாகத் திகழ்ந்தது எனல் உணமை;வெறும் புகழ்ச்சியில்லை.
“அடுத்ததாக இந்நிறுவனத்தின் பொன்விழாவில் நாம் அனைவரும் சந்திப்போம்” என மறைமலை கூறியபோது அவையினர் எழுப்பிய ஆரவாரம் இதற்குச் சான்றாகும்.


Thursday, March 13, 2008

வாழும் தமிழ்க் கவிஞர்கள்

சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தில்
பேராசிரியர் மறைமலை இலக்குவனார் 'வாழும் தமிழ்க்கவிஞர்கள்'எனும் த்லைப்பில் பாரதிதாசன் மரபுக் கவிஞர்களைப்பற்றிய தொடர்பொழிவு நிகழ்த்திவருகிறார்.தொண்ணூற்றிரண்டாம் (92) பொழிவாக
“எழிலன் கவிதைகள்” என்னும் தலைப்பில் 11/3/2008 அன்று பொழிவு நிகழ்த்தினார்.இதற்குத் தலைமை தாங்கியவர் கவிஞர்.வாசல் வசந்தப்பிரியன் ஆவார்.இவர் ‘வாசல்'என்னும் அமைப்பின் மூலம் ஒவ்வொரு திங்களும்
பல்வேறு கவிஞர்களை அரங்கேற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது தலைமையுரையைக் கவிதையாகவே இவர் வழங்கினார்.
மறைமலை இலக்குவனார் தமது ஆய்வுரையில் எழிலன் இயற்றிய
கவிதைகளின் தொகுப்புநூல்கள் மூன்றினையும் விரிவாக ஆய்வு செய்தார்.
திருக்குவளைத் தேனமுது, நம்பிக்கை நாதம், தேடிவரும் தென்றல் என்னும் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள பல்வேறு கவிதைகளின் நலம்பாராட்டிப் பேசினார்.தமது கவிதைகளில் இயைபுத்தொடையைச் சிறப்பாக எழிலன் அமைத்துள்ளார் எனக் கூறி அதற்குப் பல்வேறு சான்றுகளை அவரது
கவிதைகளிலிருந்து எடுத்துக்காட்டினார்.அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தின் போது எழிலன் படைத்த கவிதைகளைப் பாராட்டி அவரது சமுதாயச்சிந்தனைகளையும் விரிவாக அவரது கவிதைகளின் மூலம் விளக்கினார்.குமரிச்செழியன் வரவேற்புரையும் பட்டிமன்றச்செயலாளர் பக்தவத்சலம் அவர்களின் நன்றியுரையும் விழாவுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்தன.

Wednesday, February 27, 2008

அறிஞர் கோ.முத்துப்பிள்ளை தமிழ் ஆட்சிமொழியாகச் சிறப்புடன் செயற்படத்
தமது பணிக்காலத்திலும் ஓய்வு பெற்றபின்பும் கடுமையாக உழைத்தவர்.பல ஆட்சித்துறைச்சொற்களை உருவாக்கியவர்.அரசு அலுவலர்களுக்குப் பாடம் நடத்தித் தமிழில் ஆணைகளும் வரைவுகளும் வருதற்குக் காரணமாக விளங்கியவர்.இவர் இலக்கணம் பயிற்றும் விதம் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது.நகைச்சுவை மிளிர எளிமையாகக் கற்றுக்கொடுப்பதால் எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றித் தமது பிழைகளை அலுவலர்கள் திருத்திக்கொள்ள வழிகாட்டுவார்.

இவர் அளித்த ஊக்கத்தினால் பலர் புதிய கலைச்சொற்களை உருவாக்கியளித்துள்ளனர்.
தமிழ் இலக்க்யங்களை இனிய எளிய தமிழில் மக்கள் மனங்கொள்ளும் வகையில் பொழிவாற்றிப் பரப்பியவர்.கடல்கடந்து தமிழர்கள் வாழும் இடங்களுக்கெல்லாம் சென்று தமிழ் பரப்பிய பெருமை மிக்க பெரும்புலவர்.
தொண்ணூறு அகவை நிறைந்த இப்பெரியாரை,வியாசர்பாடி,மாக்கவி பாரதிநகரில் அமைந்துள்ள,அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தோம்.
கவிஞர் வே.குணசேகரன் அவரது எழில் கலை மன்றத்தின் சார்பில்
இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற அப்பெரியார்,தமிழ்த்தொண்டு
ஆற்றுவதில் தளர்ச்சிகொள்ளாது தொடர்ந்து அப்பணியை அவரவர் சூழலுக்கேற்றவாறு ஆற்றிவரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
ஊடகங்கள் தமிழுக்கு இழைத்துவரும் தீங்கினை எடுத்துரைத்து,மக்கள்
தமிழறிவும் தமிழுணர்வும் பெற ஆவன செய்யுமாறு எங்கள் அனைவரையும் வேண்டினார்.

இந்த வலைப்பூ தமிழ் நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தரும் நோக்கம் உடையது.

முதல் நிகழ்வாகத் தமிழறிஞர் கோ.முத்துப்பிள்ளை அவர்களைச் சந்தித்த

மகிழ்ச்சி மிக்க நிகழ்வு இடம் பெறுகிறது.